வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இதன் தாக்கத்தால் அக்டோபர் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் விளைவாகவே இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (அக். 25) தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை (அக். 26) இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் மாறக்கூடும்.
இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நெல்லை மற்றும் தென்காசியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் எனப் பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை இருந்தபோதிலும், அனைத்துப் பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என்றும், விடுமுறை இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
Read More : FLASH | உலக சந்தையில் என்ன நடக்கிறது..? மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை..!! சவரனுக்கு ரூ.6,400 குறைவு..!!



