கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் அப்போது உறுதியளித்தார்.
இந்த சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் வைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். முதலில் பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், பனையூருக்கு பதில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் அக்.27ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறவுள்ளார்.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மட்டுமல்லாமல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இறங்கியிருப்பதால், தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதனால், 2026 தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம், அதிமுக, பாஜக கட்சிகள் விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனால், விஜய் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விஜய் தனது அடுத்த அரசியல் முடிவுகளை தனது அடுத்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாகும் வரை அறிவிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பான சூழலை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஒருவேளை அவர் தனது கட்சியை கலைப்பது போன்ற முடிவுகளை எடுத்தாலும் கூட, அது ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான பிறகுதான் அறிவிக்கப்படலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், விஜய்யின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவரது கூட்டணியைப் பற்றிய முடிவுகள் அனைத்தும் அவரது அடுத்த திரைப்படத்தின் வெளியீட்டை சார்ந்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



