தங்கம், பல நூற்றாண்டுகளாக உலகளவில் செல்வத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடையாளமாகத் திகழும் உலோகம். அதன் தனித்துவமான பளபளப்பு, வேறு எந்த உலோகத்திற்கும் இல்லாத மதிப்பைத் தந்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவைப் போன்ற ஆசிய நாடுகளில், இது சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. நாம் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், உலகில் அதிகளவில் புதைந்துள்ள தங்க வளங்கள், எதிர்பாராத சில நாடுகளில் செறிந்துள்ளன. பூமிக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் இந்த மகத்தான தங்க இருப்பு, அந்த நாடுகளுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார ஆற்றலைக் கொடுக்கும் திறன் கொண்டது.
உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய தரவுகளின்படி, உலகெங்கிலும் சுமார் 2,44,000 மெட்ரிக் டன் தங்கம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 1,87,000 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள 57,000 மெட்ரிக் டன் தங்கம் இன்னும் பூமிக்கு அடியில் புதைந்துள்ளது. இந்த மாபெரும் புதையலின் பெரும்பகுதி சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெட்டி எடுக்கப்படாத தங்க இருப்பின் அடிப்படையில், ஆஸ்திரேலியா முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டின் மண்ணுக்கு அடியில் சுமார் 12,000 மெட்ரிக் டன் தங்கம் புதைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக 720 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார் ரூ.60 லட்சம் கோடி) அதிகமாகும். இதே அளவு தங்க இருப்பைக் கொண்டு ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தோனேசியா (3,600 மெட்ரிக் டன்), தென் ஆப்பிரிக்கா (3,200 மெட்ரிக் டன்) மற்றும் அமெரிக்கா (3,000 மெட்ரிக் டன்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.



