கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ராஜவேலின் மகள் ராதிகா (35). இவர் விருத்தாசலம் அருகே வீராரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி ராதிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் விரைந்து சென்று ராதிகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ராதிகாவின் தந்தை ராஜவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ராதிகாவின் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராதிகா பணிபுரிந்த தனியார் பள்ளியின் தாளாளரின் மகனான பிரின்ஸ் நவீன் என்பவருக்கும் ராதிகாவுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. திருமண வாக்குறுதி அளித்து பிரின்ஸ் நவீன் ராதிகாவுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, பிரின்ஸ் நவீன் ராதிகாவைத் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மனதளவில் வேதனை அடைந்த ஆசிரியை ராதிகா, வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த தனியார் கல்வி நிறுவனம் மற்றும் தாளாளரின் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நீடிப்பது தெரியவந்துள்ளது. இதே பள்ளியின் தாளாளர், 3 ஆண்டுகளுக்கு முன்பு கருணை இல்ல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தாளாளரின் மகனான பிரின்ஸ் நவீனும் இதேபோல் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும், வறுமையில் உள்ள ஆசிரியைகளை ஆசை வார்த்தைகள் கூறி சீரழித்து வந்ததும் காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, தாளாளரின் மகனான பிரின்ஸ் நவீனை மங்கலம்பேட்டை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டி, பாதிக்கப்பட்டவரின் தாயார், இந்த தனியார் கல்வி நிறுவனத்தின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து, அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



