பெங்களூரு கெங்கேரி அருகே உல்லால் உபநகர் பகுதியில் வசித்து வரும் சீனிவாஸ் சுவாமி என்பவர், தன்னை ஒரு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு, பேய் பிடித்தவர்களை விடுவிப்பதாக சொல்லிவந்தார். இவரை நம்பிப் பலரும் இவரது வீட்டிற்கு வந்து சென்றதால், இவர் அடிக்கடி இரவில் பூஜை என்ற பெயரில் சத்தமாக மந்திரங்களை ஓதுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவில் சீனிவாஸ் சுவாமி, ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு ‘ஹ்ரீம்.. ஹ்ரீம்.. ஹ்ரூம்.. பட்.. பட்…’ போன்ற மந்திரங்களை சத்தமாக உச்சரித்துள்ளார். இந்தச் சத்தம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்குப் பெரும் இடையூறாக இருந்ததுடன், பயத்தையும் ஏற்படுத்தியது. இதனால் தூக்கம் கெட்ட பக்கத்து வீட்டினர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகாரளித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், சீனிவாஸ் சுவாமியை அழைத்துச் சென்று, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் அமைதியாக இருக்கும்படி எச்சரித்து அனுப்பினர். போலீசாரின் எச்சரிக்கையால் கோபமடைந்த சீனிவாஸ் சுவாமி, மறுநாள் காலையில் போலீசில் புகாரளித்த பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பு நின்றவாறே, “இன்னும் ஒரு மாதத்தில் ரத்த வாந்தி எடுத்துச் செத்து விடுவாய்” என்று சாபம் விட்டார்.
இந்த சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர், இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாஸ் சுவாமி மீது கிரிமினல் வழக்குத் தொடர நீதிமன்றத்தை நாடினார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மந்திரவாதி என்று கூறிக்கொள்ளும் சீனிவாஸ் சுவாமி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஞானபாரதி காவல் நிலையத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானபாரதி காவல்துறையினர் சீனிவாஸ் சுவாமி மீது கர்நாடகா மூடநம்பிக்கை மற்றும் சூனியம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். “சீனிவாஸ் சுவாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைப்போம். அவருக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது” என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கிரிஷ் கூறுகையில், “மாந்திரீகம், மந்திரம் போன்றவற்றை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கலாம். அதேவேளையில், இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் சிரமங்கள் உள்ளதால், புகார்தாரர்கள் விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பையும் ஆதாரங்களையும் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.



