நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொறுக்கையில் அமைந்திருக்கிறது அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் மற்றொரு புராணப் பெயர் திருக்குறுக்கை. ஹோலிப் பண்டிகைக்குக் காரணமாக இருந்த ‘காம தகனம்’ (மன்மதனை எரித்தது) நிகழ்ந்த இடமாக இத்தலம் பார்க்கப்படுகிறது.
இக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மணலுக்குப் பதில் தோண்ட, தோண்ட சாம்பல் கிடைப்பது இன்றும் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தலத்தின் மூலவர் வீரட்டேஸ்வரர், தாயார் ஞானாம்பிகை, உற்சவர் யோகேஸ்வரர் ஆவர்.
மன்மதனை எரித்த சிவபெருமான் :
ஒருமுறை சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டபோது, உலகமே வெப்பத்தால் தகித்தது. இதனால் அஞ்சிய தேவர்கள், சிவனின் தவத்தை கலைத்து உலகை காக்க முடிவு செய்தனர். ஆனால், இதை முருகப் பெருமான் மறுக்கவே, தேவர்கள் மன்மதனிடம் சென்று உதவி கோரினர். அனைவரின் வேண்டுகோளை ஏற்று மன்மதன், சிவபெருமான் மீது மன்மத அம்பை தொடுத்தான். இதனால் தவம் கலைந்த ஈசன், தன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார்.
மன்மதனின் மனைவி ரதிதேவி, இறைவனிடம் மன்றாடி அழுததால், ரதியின் வேண்டுதலுக்கு இணங்கி மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்தார். ஆனால், இனிமேல் மன்மதனை ரதி தேவியால் மட்டுமே பார்க்க முடியும் என்று அருளினார். இந்தப் புராண நிகழ்வே வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகவும், தமிழ்நாட்டில் மாசி மாதப் பௌர்ணமி தினத்தில் காம தகனம் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
கோயிலின் அற்புதமும் பலன்களும் :
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் களிமண் நிறைந்திருக்க, காமன் தகனம் செய்யப்பட்டதாக நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், எவ்வளவு தோண்டினாலும் சாம்பலே வருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இந்த வீரட்டேஸ்வரர் ஆலயம், அஷ்ட பைரவர் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வந்து வீரட்டேஸ்வரரை வணங்கிச் சென்றால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்குப் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். வீட்டில் பிரச்சனை, கணவன்-மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுப் பிரிந்து போகும் நிலையில் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசித்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும். மேலும், இந்தத் திருத்தலம் திருநாவுக்கரசரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற பெருமைக்குரிய தலமாகும்.



