சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று முன்தினம் கோட்டையூர் பரிசல் துறையின் காவிரி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்து கிடந்தவர், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் காவிரி கரையோரம் அமைந்துள்ள கோபிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் (70) என்பது தெரியவந்துள்ளது. சங்கரனுக்கும், அவரது மகன் கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆத்திரத்தில், கோவிந்தராஜ் தன் தந்தையை அடித்துக் கொன்று, பின்னர் சடலத்தை காவிரி ஆற்றில் வீசியுள்ளார். காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சங்கரனின் சடலம், இறுதியில் கோட்டையூர் பரிசல் துறையில் கரை ஒதுங்கியதும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் போலீசார் உடனடியாக கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கோட்டையூர் பகுதிக்கு விரைந்து வந்த மாதேஸ்வரன் மலை போலீசார், சங்கரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மாதேஸ்வரன் மலை போலீசார், தந்தையைக் கொலை செய்த மகன் கோவிந்தராஜை வலைவீசித் தேடி வருகின்றனர். தந்தையைக் கொன்று ஆற்றில் வீசிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



