தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில், 311 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வரும் நிலையிலும், இத்தனை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கை இல்லாத இந்தப் பள்ளிகளில் மொத்தம் 432 ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகும் இந்த நிலை நீடிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் சேர்க்கை இல்லாததற்கான உண்மையான காரணங்கள் மற்றும் நிலவும் சவால்கள் குறித்து ஆராய கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஆசிரியர்களின் பணியிட மாற்றம் அல்லது பள்ளிகளை மூடுவது போன்ற கடினமான முடிவுகளை அரசு எடுக்க நேரிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



