விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள முதலூர் எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (36). கட்டிடத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன்னுடன் சித்தாள் வேலை செய்து வந்த கௌதமி (28) என்ற பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொளத்தூர், திருவள்ளுவர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மது அருந்தியுள்ளனர். வேலைக்குச் செல்லாமல் போதையில் இருந்த இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையிடத் தொடங்கியுள்ளனர். காலையிலிருந்து மாலை வரை இருவரும் மிகுந்த போதையில் சண்டையிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, இவர்களுக்கு வீட்டின் எதிரே வசிக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான திப்பு சுல்தான் (30) என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். போதையில் இருந்த சிவா, திப்பு சுல்தான் மீது விழுந்ததுடன், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி ஒருமையில் பேசியுள்ளார். இவர்களின் ஆட்டம் எல்லை மீறிப் போகவே ஆத்திரமடைந்த திப்பு சுல்தான், சிவாவைப் பிடித்து வேகமாகத் தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறிய சிவா, சுவற்றில் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார், சிவாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் மூர்த்தி, திப்பு சுல்தானைக் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
உயிரிழந்த சிவாவுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கள்ளக்காதல் ஜோடியின் மதுபோதைப் பழக்கம் மற்றும் ரகளையானது இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



