பாடலாசிரியர் வைரமுத்துவின் உதவியாளராக சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றிய சினேகன், 1997-ல் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘புத்தம் புது பூவே’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் தனது முதல் பாடலை எழுதினார். இதுவரை சினேகன் சுமார் 750 முதல் 800 திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மிக பிரபலமானார்.
பின்னர் அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, அரசியல் பயணத்தையும் தொடங்கினார். 2021 ஆம் ஆண்டு நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்ட சினேகனுக்கு, கடந்த ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.
அவரது தந்தை இறந்தது குறித்து, சினேகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நட்புக்குறிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் / அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமாகி விட்டார் என்ற துயர தகவலை தெரிவித்து கொள்கிறேன்.
நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read more: மத்திய அரசு பள்ளிகளில் 7,267 காலிப்பணியிடங்கள்.. கை நிறைய சம்பளம்..!! விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..



