வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மோன்தா புயலாக மாறியது.. சென்னைக்கு 560 கி.மீ வேகத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் காக்கிநாடாவுக்கு 620 கி.மீ, தெற்கு தென் கிழக்கிலும், விசாகப்பட்டினத்திற்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது..
இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.. முன்னதாக 16 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் சற்று குறைந்துள்ளது.. அதன்படி மோன்தா புயல் தற்போது வடமேற்கு திசையில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது.. இந்த புயல் நாளை காலை தீவிர புயலாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த புயல் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.. புயல் கரையை கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோன்தா புயலால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தனியார் வானிலை ஆய்வாளர், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மோன்தா புயலின் வெளிப்புற மேற்குப் பகுதிகள் சென்னையைத் தொடுகின்றன.. இதனால் தூறல், லேசான மழை முதல் மிதமான மழை வரை, அவ்வப்போது கனமழை என இன்று நாள் முழுவதும் மழை தொடரும்.
ஆந்திராவுக்கு அருகில் உள்ள திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் புலிகாகு பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யும். வட சென்னையில் மட்டும் இந்த கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட சென்னையுடன் ஒப்பிடும்போது தென் சென்னையில் மழை சற்று குறைவாக இருக்கும். ஒட்டுமொத்தமாக இந்த மோன்தா புயல் பற்றி சென்னை அல்லது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கவலைப்பட பெரிய விஷயம் எதுவும் இல்லை.” என்று பதிவிட்டுள்ளார்..



