காலையில் சோம்பலை விரட்ட, மாலை நேரத்தில் புத்துணர்ச்சி பெற, ஏன்… சாதாரணமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க கூட தேநீரை கையில் எடுக்கும் பழக்கம் இன்று பலருக்கும் நிரந்தரமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் மது அருந்துபவர்களை விட டீக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.
ஆனால், கட்டுப்பாடு இல்லாமல் தேநீர் அருந்துவது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், குறிப்பாக டீ குடிக்கும் நேரத்தைச் சுற்றியுள்ள நீர் அருந்தும் பழக்கம் குறித்துப் பலருக்கும் குழப்பம் நிலவுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டீ குடிக்கும் முன் தண்ணீர் :
காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்துவது வாயுத் தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இத்தகைய சூழலில், டீ குடிப்பதற்கு முன்பு தண்ணீர் அருந்துவது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, வெதுவெதுப்பான நீர் அருந்துவது உடலின் PH அளவை சமநிலைப்படுத்த உதவும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் ஏற்படும் அமிலத்தன்மையைச் சமாளிக்க, அதற்கு முன் ஒரு சிப் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டீ குடித்த பின் தண்ணீர் :
தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பது தவறான செயல் என்று கூறப்படுகிறது. சூடான தேநீர் அருந்திய பிறகு உடனடியாகக் குளிர்ந்த நீரை அருந்துவது சளி, மூக்கில் ரத்தம் வருதல் மற்றும் பல் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த திடீர் வெப்பநிலை மாற்றம் பற்களை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றிவிடும். எனவே, தேநீர் அருந்திய பிறகு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு காத்திருப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில், ஒரு சிப் வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரை அருந்தலாம்.
கட்டுப்பாடு அவசியம் :
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, தேநீர் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் தேநீர் குடிப்பதை குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாக வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் பழக்கத்தை முழுமையாக தவிர்ப்பது உடல் நலனுக்கு மிகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.



