சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பான் இந்தியா திரைப்படங்களில், முன்னணி நடிகைகளை ஒரு பிரத்யேகப் பாடல் காட்சிக்கு நடனம் ஆட வைப்பது ஒரு கலாச்சார ட்ரெண்டாக மாறியுள்ளது. இந்தப் பழக்கம் முன்பே இருந்தாலும், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இது உச்சம் தொட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா’ (பாகம் 1) திரைப்படத்தில், நடிகை சமந்தா ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்குச் சிறப்பு நடனம் ஆடியிருந்தார். கவர்ச்சி நிறைந்த இந்தப் பாடல், வெளியாகி யூடியூபில் பல கோடி பார்வைகளை அள்ளியதுடன், அடுத்தடுத்த பான் இந்தியா படங்களுக்கு ஒரு புதிய வாசலைத் திறந்துவிட்டது.
அதைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல், சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே ஆடிய ‘மோனிகா’ பாடல் என இந்த ட்ரெண்ட் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக, ‘மோனிகா’ பாடல், படம் வெளியாகுவதற்கு முன்பே மிகப்பெரிய விளம்பரமாக மாறியது. அதேபோல், ‘புஷ்பா 2’ படத்திலும் நடிகை ஸ்ரீலீலா, ‘கிஸ்ஸிக்’ என்ற பாடலுக்கு ஆடிய நடனம் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
பூஜா ஹெக்டேவுக்கு காத்திருக்கும் மெகா சான்ஸ் :
இந்த வரிசையில், தற்போது அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட படத்திலும் ஒரு சிறப்புப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ, அல்லு அர்ஜூனுடன் கைகோத்துள்ளதால், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தற்காலிகமாக ‘AA22xA6’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ. 800 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தில், பிரத்யேகப் பாடலுக்கு நடனமாட நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாடல் நடனத்திற்காக அவருக்குச் சம்பளமாக ரூ. 5 கோடி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது, பான் இந்தியா திரைப்படங்களில் சிறப்புப் பாடலுக்கு நடிகைகள் பெறும் அதிகபட்ச சம்பளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.



