கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த முகாம்கள் நவம்பர் 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வருகின்றனர்.
புதிதாக விண்ணப்பித்த பெண்களின் வீட்டிற்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விஏஓ தலைமையிலான குழு கள ஆய்வுக்கு வரும். அந்த ஆய்வின்போதே உங்களுடைய தகவல்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், அப்போதே உங்களுடைய மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அதேநேரத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றால் குறுஞ்செய்தி உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரும். அதேபோல், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கும், ஏன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணம் தெரியப்படுத்தப்படும். ஒருவேளை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் சரியானது இல்லை என நினைப்பவர்கள் மேல்முறையீடு செய்யலாம். நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு மேல்முறையீடு செய்வதற்கான அறிவிப்பை அரசு அறிவிக்கும்.
Read more: காரணமின்றி ரயிலில் சங்கிலியை இழுத்தால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் தெரியுமா?



