வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, இன்று (அக்.28) சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தான், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக வதந்தி பரவியதாகவும், பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், விடுமுறை என மகிழ்ச்சியாக இருந்த மாணவர்கள் இந்த செய்தியை அறிந்து கவலையில் உள்ளனர்.
நேற்று காலை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்த நிலையில், மாலை வேளையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை போன்ற புறநகர் பகுதிகளில், சென்னையைப் போலவே கனமழை பெய்தபோதும், அங்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கவில்லை. விடுமுறை குறித்த அறிவிப்புக்காக காலையில் எதிர்பார்த்திருந்த செங்கல்பட்டு மாவட்ட மாணவர்கள் ஏமாற்றத்துடன் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.



