அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுக ஆட்சியின்போது மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டன. மழை வெள்ளப் பாதிப்புகளை திமுக அரசு திட்டமிட்டப்படி செயல்படுத்தவில்லை.
அதிமுக ஆட்சியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது. எப்போது மோட்டார் வாங்கி, எப்போது தண்ணீரை வெளியேற்றுவார்கள். 4,000 கோடி ரூபாயில் மழை வெள்ள வடிகால் பணிகள் நடைபெற்றதாகக் கூறியது என்ன ஆனது? முகாமில் தங்கியிருப்போருக்கு உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர்.
மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வானிலை மையம் எச்சரித்த போதும் திமுக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. கார்கள் மிதந்த காட்சிகளை இப்போதுதான் பார்க்கிறோம். வேறு எந்தக் காலத்திலும் இது போல் பார்த்ததில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டே அதிமுக மீது குறை கூறுகிறார். அதிமுக ஆட்சியில் புயல் ஏற்பட்டபோது உடனுக்குடன் மின்சாரம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் இன்னல்களை சந்திக்காத வகையில், அதிமுக ஆட்சி செயல்பட்டது. இனியாவது திமுக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.