தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் இடங்களைக் குறிவைத்து விடுக்கப்படும் தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், வானிலை ஆய்வு மையம், அதிமுக தலைமை அலுவலகம் போன்ற முக்கிய அரசு மற்றும் அரசியல் மையங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தனிப்பட்ட பிரமுகர்களின் வீடுகளுக்கும் இந்த அச்சுறுத்தல் நீண்டு வருகிறது. முதலமைச்சர் முக.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளுக்குக் கூட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவரது இல்லம் முன்பு காவல்துறை குவிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த அச்சுறுத்தல்களின் தொடர்ச்சியாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவரது வீட்டில் வெடிகுண்டு வெடிக்கக் கூடும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்ததையடுத்து, காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் மோப்ப நாய்களின் உதவியுடன் செல்வப்பெருந்தகையின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தான், சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் இதுவும் புரளி என தெரியவந்தது.
தொடர்ந்து வரும் இதுபோன்ற போலி மிரட்டல் அழைப்புகளால் பாதுகாப்புப் படையினரின் நேரம் மற்றும் வளங்கள் வீணடிக்கப்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பைப் பற்றிய அச்சமும் அதிகரித்துள்ளது. இந்த தொடர் மிரட்டல்களுக்குப் பின்னால் இருக்கும் நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



