திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மூத்த மகள் மீனாட்சி (23), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான ஆணுடன் மீனாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். மகளின் எதிர்காலம் குறித்து கவலையடைந்த மீனாட்சியின் பெற்றோர், இந்தத் தொடர்பைக் கைவிடுமாறு தங்கள் மகளைக் கண்டித்துள்ளனர். மேலும், அந்த ஆண் நண்பரையும் அவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் கண்டித்தும், மீனாட்சி தொடர்ந்து அந்த ஆணுடன் பழகி வந்ததால், அவரது பெற்றோர் அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். எனினும், பெற்றோரின் பேச்சைக் கேட்காத மீனாட்சி தொடர்ந்து வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று காலை வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மீனாட்சி, இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் இரவு முழுவதும் மகளைத் தேடி அலைந்துள்ளனர். பின்னர், திண்டுக்கல் பழைய கரூர் சாலைப் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே மீனாட்சி வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு பெற்றோரும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தாலுகா காவல்துறையினர், மீனாட்சியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மீனாட்சியின் கொலைக்கு யார் காரணம்..? ரயில்வே மேம்பாலத்திற்கு அவர் எப்படி வந்தார் என்ற கோணங்களில் தீவிர விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையிலேயே, மீனாட்சி பழகி வந்த திருமணமான நபர், தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து மீனாட்சியைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்து, கொலைக்கான உண்மையான காரணம், சதித்திட்டம் உள்ளிட்டவை குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்குச் சென்ற இளம் பெண் வெட்டிக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : பெண் குழந்தைகள் பிறந்தால் ஆணாக மாற்றும் பெற்றோர்கள்..!! இப்படி ஒரு விநோத பழக்கமா..? எங்கு தெரியுமா..?



