இந்தியாவின் சேவைத் துறை தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 30 சதவீதம் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது உலக சராசரியான 50 சதவீதத்தைவிட குறைவு, எனவே இந்தியாவில் “மந்தமான அமைப்புக் கட்டமைப்பு மாற்றம்” (structural transition) நடைபெறுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது.
வேலைவாய்ப்பில் வளர்ச்சி இருந்தாலும் நீடிக்கும் சவால்கள்
‘India’s Services Sector: Insights from Employment Trends and State-Level Dynamics’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சேவைத் துறையில் வேலைவாய்ப்பு 2011-12ல் 26.9% இருந்தது. அது 2023-24ல் 29.7% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன,” என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அளவு இன்னும் உலக சராசரிக்கு மிகவும் குறைவானது. எனவே, அமைப்புக் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், சமூகப் பாதுகாப்பை விரைவுபடுத்தல், அநியமனத் தொழிலாளர்களை டிஜிட்டல் பதிவு செய்தல், பராமரிப்பு சேவைகளை முறையாக மாற்றுதல் எனப் பல முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த அறிக்கையில் ” சேவைத் துறை இந்தியாவின் தேசிய உற்பத்தியில் பாதிக்குமேல் பங்களிப்பை அளிக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பில் அதன் பங்கு மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவு. மேலும், பெரும்பாலான வேலைகள் அநியமன மற்றும் குறைந்த சம்பளத்துடன் உள்ளன.
“வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இடையே உள்ள வேறுபாடு — இதுவே இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சியின் மைய சவாலாகும்,” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
பாலின மற்றும் நகர-கிராம வேறுபாடு
நகர்ப்புறங்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் 60% பேர் சேவைத் துறையில் உள்ளனர். ஆனால் கிராமப்புறங்களில் இது 20%க்கும் குறைவு. கிராமப்புற பெண்களில் 10.5% பேர் மட்டுமே சேவைத் துறையில் பணியாற்றுகின்றனர், அதேசமயம் நகர்ப்புற பெண்களில் 60% பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் பெரும்பாலும் குறைந்த மதிப்புடைய பணிகளில் மட்டுமே.
கல்வி – திறன் இடைவெளி
“இந்தியாவில் கல்வித் திறன்கள் வேகமாக உயர்ந்தாலும், சேவைத் துறையில் கிடைக்கும் வேலைகள் அதற்கேற்ற தரத்தில் இல்லை. திறன்கள் மற்றும் துறை தேவைகள் இணைவதில் தாமதம் உள்ளது.” என்று நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது..
பெரிய மாநிலங்களில் சில்லறை வியாபாரம் மற்றும் போக்குவரத்து துறை அதிக வேலைவாய்ப்புகளை அளித்தாலும், அவை குறைந்த உற்பத்தித் திறனுடன் இயங்குகின்றன. மாறாக, தகவல் தொழில்நுட்பம், நிதி, தொழில்முறை சேவைகள் போன்ற நவீன துறைகள் வளர்ச்சியைத் தள்ளிச் சென்றாலும், அவை குறைந்த பணியாளர்களையே உறிஞ்சுகின்றன.
மாநில அளவிலான வேறுபாடுகள்
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உயர் உற்பத்தித் திறனுடன் கூடிய சேவை மையங்களாக வளர்ந்துள்ளன. ஆனால் பீஹார், மத்யப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இன்னும் குறைந்த மதிப்புடைய பாரம்பரிய துறைகளில் மட்டுமே மையப்படுத்தப்பட்டுள்ளன.
நிதி ஆயோக் பரிந்துரைகள்
சேவைத் துறையில் உள்ள இடைவெளிகளை நீக்க நிதி ஆயோக் நான்கு முக்கிய திசைகளை முன்வைத்துள்ளது:
கிக், சுயதொழில், சிறுகுறு தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துவது.
பெண்கள் மற்றும் கிராம இளைஞர்களுக்கான குறிவைத்த திறன் பயிற்சி மற்றும் டிஜிட்டல் அணுகல்.
பசுமை பொருளாதாரம் மற்றும் புதிய தொழில்நுட்பத் திறன்களில் முதலீடு.
Tier-II மற்றும் Tier-III நகரங்களில் சேவை மையங்களை உருவாக்கி சமநிலையான பிராந்திய வளர்ச்சி.
மற்றொரு அறிக்கை: சேவைத் துறையின் பொருளாதார பங்கு உயர்வு
‘India’s Services Sector: Insights from GVA Trends and State-Level Dynamics’ என்ற இரண்டாவது அறிக்கையில், சேவைத் துறை 2024-25 ஆம் ஆண்டில் தேசிய மொத்த மதிப்புக்குச் சுமார் 55% பங்களிக்கிறது — இது 2013-14 இல் இருந்த 51% ஐ விட அதிகம்.
நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் “சில மாநிலங்களுக்கு இடையே சேவைத் துறை பங்கு வேறுபாடு ஓரளவு அதிகரித்தாலும், வளர்ச்சியில் பின்னடைந்த மாநிலங்கள் மெதுவாக முன்னேறத் தொடங்கியுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம், இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி மெதுவாக, ஆனால் பரவலாகவும் இணைந்ததாகவும் மாறி வருவதை அறிக்கை வலியுறுத்துகிறது.
அறிக்கையின் முடிவில் நிதி ஆயோக் சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது :
டிஜிட்டல் உள்கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ், நிதி சேவைகள், திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் மாநிலங்கள் தனித்துவமான சேவைத் திட்டங்களை உருவாக்கி,
சேவைத் துறையை தொழில்துறை சூழலுடன் இணைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது..
Read More : ‘ஓட்டுக்காக பிரதமர் மோடி டான்ஸ் கூட ஆடுவார்’: பீகாரில் ராகுல் காந்தி அட்டாக்.. பாஜக கொடுத்த பதிலடி.!



