தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன், கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், சமீபத்தில் அறிவித்த 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில், கட்சியின் முக்கியப் பதவியான பொருளாளர் வெங்கட்ராமன் பெயர் இடம்பெறாதது, கட்சி வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட அனைத்துத் தலைமைக்கழக நிர்வாகிகளும் குழுவில் இடம் பெற்றுள்ள நிலையில், பொருளாளர் மட்டும் தவிர்க்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
வெங்கட்ராமன் தவெகவின் பொருளாளராக இருப்பது மட்டுமின்றி, விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே அவரது அனைத்துச் சொத்து மற்றும் வரவு செலவு கணக்கு விவரங்களையும் கையாண்டு வரும் மிகவும் நம்பகமான நபராக அறியப்படுகிறார். விஜய்க்கு இவ்வளவு நெருக்கமானவரும், கட்சியின் உயர் பதவி வகிப்பவருமான ஒருவரை நிர்வாகக் குழுவில் இருந்து திடீரென ஒதுக்கி வைத்ததன் பின்னணி என்னவென்று தவெக நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
சமீபத்தில் கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரைச் சந்தித்த நிகழ்ச்சியில், வெங்கட்ராமன் சற்று தாமதமாகச் சென்றதால் பவுன்சர்கள் அவரை உள்ளே விட மறுத்தனர். பின்னர், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் பேசிய பின்னரே அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்த வெங்கட்ராமன், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்கான பண விவகாரமாக வங்கிக்குச் சென்றுவிட்டுத் திரும்ப தாமதமானது. நான் தாமதமாக வருவேன் என்று புஸ்ஸி ஆனந்திடம் தெரிவித்திருந்தேன். அவர் பவுன்சர்களிடம் சொல்ல மறந்ததால் குழப்பம் ஏற்பட்டது. மற்றபடி வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று கூறியிருந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, நிர்வாகக் குழுவில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. விஜய்யின் இந்த முடிவு, கட்சிக்குள் ஏதேனும் உட்கட்சிப் பூசல்கள் உருவாகியுள்ளனவா அல்லது கட்சியின் பொருளாளரின் முக்கியத்துவத்தை விஜய் குறைத்து மதிப்பிட்டுள்ளாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த சூழலில் தான், அதிருப்தியில் இருக்கும் பொருளாளர் வெங்கட்ராமன் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், விஜய் அவரை தனியாக அழைத்துப் பேசுவார் என்றும் தவெக நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.



