நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் காலியாக இருந்த 2,538 பணியிடங்களுக்கு வேலை வழங்குவதற்காக பெருமளவு பணம் பெறப்பட்டு முறைகேடாக ஆட்களை நியமித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த முறைகேடு குறித்த ஆவணங்கள், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைப்பற்றப்பட்ட இந்த முக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே, சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் கே என் நேரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றன. இதனால் தற்போது தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



