மும்பையின் பவாய் பகுதியில் இன்று (அக்டோபர் 30) அதிர்ச்சியும் பதட்டமும் சூழ்ந்த சூழ்நிலை உருவானது. ரோஹித் ஆர்யா என்ற நபர் ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன.
குழந்தைகள் பாதுகாப்பாக மீட்பு
மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் ரோஹித் ஆர்யா, சில குழந்தைகளுடன் ஸ்டூடியோவில் தன்னை பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஸ்டூடியோவுக்கு வெளியே திரண்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..
மும்பை போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டு, ரோஹித் ஆர்யாவை கைது செய்துள்ளனர். அங்கு பெரும் அளவில் போலீஸ் பாதுகாப்பு அமர்த்தப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகள் இணைந்து, சம்பவத்தை அமைதியாக முடிக்க ஒருங்கிணைத்து செயல்பட்டனர்.
பிற்பகல் 3 மணியளவில் காவல்துறையினரிடமிருந்து துறைக்கு ஒரு அழைப்பு வந்ததாக மும்பை தீயணைப்புப் படையின் நிலைய அதிகாரி அபிஜித் சோனாவனே தெரிவித்தார். மேலும் “எங்கள் ஹைட்ராலிக் கருவிகளைப் பயன்படுத்தி கிரில்ஸைத் திறந்து, போலீசாருக்கு அணுகலை வழங்கினோம். அவர்கள் உள்ளே நுழைந்தனர், இப்போது அனைவரும் மீட்கப்பட்டனர்.” என்று தெரிவித்தார்.
அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும், உரிய சரிபார்ப்புக்குப் பிறகு மேலும் விவரங்கள் பகிரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்யா ஒரு வீடியோவை வெளியிட்டதாகவும், அதில் அவர் சிலருடன் பேச விரும்புவதாகவும், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ” அனைவரையும் தீ வைத்துக் கொள்வேன், எனக்கும் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிப்பேன்” என்று மிரட்டியதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
எனினும் மனநல நிபுணர்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் பயிற்சி பெற்ற அதிகாரிகள் சம்பவ இடத்தில் ரோஹித் ஆர்யாவுடன் பேசி, குழந்தைகள் பாதுகாப்பாக வெளியே வருவதை உறுதி செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகுதி முழுவதும் பதட்டம்
இந்த சம்பவம் காரணமாக பவாய் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.. பொதுமக்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.. ரோஹித் ஆர்யா சமீபத்தில் மனஅழுத்தம் மற்றும் உளநல பிரச்சனைகளை சந்தித்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த பகுதி மக்கள் குழந்தைகள் நலத்தைப் பற்றி கவலை தெரிவித்துள்ள நிலையில், அதிகாரிகள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.



