உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சொந்த அண்ணனே தங்கையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் ஆசிஷ் நிஷாத் (32) என்பவரது தங்கை நீலம் (19). அரசு வழங்கிய சுமார் ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்வதில் அவர்களிடையே நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்துள்ளது.
சமீபத்தில், இந்தப் பணப் பங்கீடு தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராம் ஆசிஷ், நீலத்தின் கழுத்தைத் துணியால் நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், இந்த கொலையை மறைக்கத் திட்டமிட்ட ராம், நீலத்தின் உடலைச் சாக்கு மூட்டையில் அடைக்க முயன்றுள்ளார்.
அதற்காக, அவரது கை கால்களை உடைத்து, உடலை மூட்டையாக கட்டி, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்திற்குச் சென்று வீச முயற்சித்துள்ளார். அப்போது, வழியில் காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் சிக்கியபோது, சாக்கு மூட்டையில் கோதுமை இருப்பதாகக் கூறி காவலர்களை சாமர்த்தியமாக ஏமாற்றிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், நீலத்தைக் காணாத குடும்பத்தினர் ஆரம்பத்தில், அவர் சத் பூஜைக்காக வெளியூர் சென்றிருக்கலாம் என நினைத்தனர். ஆனால், நீண்ட நாட்களாக அவர் திரும்பாததால், சந்தேகம் அடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். பின்னர், அவர்கள் நடத்திய விசாரணையில், ராம் ஆசிஷ் பெரிய சாக்கு மூட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை அருகில் வசிப்பவர்கள் பார்த்ததாக தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் ராம் ஆசிஷைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், பணப் பங்கீடு தகராறில் தனது தங்கையை தானே கொலை செய்ததாக ராம் ஆசிஷ் ஒப்புக் கொண்டார் அவரது வாக்குமூலத்தின்படி, காவல்துறையினர் குறிப்பிட்ட கரும்புத் தோட்டத்திற்குச் சென்று சடலத்தைக் கண்டெடுத்தனர். பின்னர், அழுகிய நிலையில் காணப்பட்ட நீலத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பணத்தாசைக்காக சொந்த தங்கையையே அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணன் ராம் ஆசிஷை போலீசார் கைது செய்தனர்.
Read More : மிளகாய் தூளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..? நிபுணர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!



