பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி என்பவரது மகள் மீரா ஜாஸ்மீன் என்பவர், வேலைக்கு இண்டர்வியூக்கு சென்ற நிலையில், சாமங்கலம் காப்புக் காட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் அந்தோணி சாமி – கலா தம்பதியினர், தங்கள் மகள் மீரா ஜாஸ்மீனின் உயர்கல்விக்காகத் தற்போது குடும்பத்துடன் திருச்சி மாநகர் சீனிவாச நகர் பகுதியில் வாடகைக்குக் குடியேறியுள்ளனர். மீரா ஜாஸ்மீன், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதப் படிப்பை கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவு செய்த நிலையில், தீவிரமாக வேலை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி காலை, மீரா ஜாஸ்மீன் தன் தாயிடம் வேலைக்கான நேர்காணலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கும் அவர் கிடைக்காததால், உறவினர்கள் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாகத் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
இந்நிலையில், மீரா ஜாஸ்மீனின் செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடைசியாக அவரது இருப்பிடம் சாமங்கலம் காப்புக் காட்டுப் பகுதியைச் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்று தேடியபோது, உடல் முற்றிலும் எரிந்த நிலையில் மீரா ஜாஸ்மீன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறையினர், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மருத்துவமனையில் மகளின் உடலைப் பார்த்து தாய் கலா கதறியழுத காட்சி, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடலை எரித்திருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. சடலத்துக்கு அருகே இரண்டு பீர் பாட்டில்களும், இருசக்கர வாகனம் வந்து சென்ற தடங்களும் இருந்ததால், இரண்டு இளைஞர்கள் மீரா ஜாஸ்மீனை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து இந்தக் கொடூரச் செயலை செய்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



