விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்த தொழில் அதிபர் கண்ணன் அச்சகம், கிரானைட், டைல்ஸ் நிறுவனம், குவாரி உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சாலைப்பணிக்கான டெண்டரை வாங்கி தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக சுதா என்ற பெண் மீது புகார் அளித்துள்ளார்.
தகவலின்படி, கண்ணனின் நிறுவனத்தில் பணியாற்றிய எஞ்சினியர் சங்கரநாராயணன், சிவகாசி கிரகத்தாயம்மாள் நகரைச் சேர்ந்த சுதா (37) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். தன்னை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஒருங்கிணைப்பாளர் என்றும், விரைவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற இருப்பதாகவும் கூறி சுதா கண்ணனை நம்ப வைத்துள்ளார்.
அதன் பின்னர், “நான் வீடு கட்டப் போகிறேன், அதற்குத் தேவையான கிரானைட் கற்களை உங்கள் குவாரியில் இருந்து வாங்க விரும்புகிறேன். நீங்கள் உதவினால் பேராபட்டியில் சாலை அமைப்பதற்கான டெண்டரை பெற்றுத்தருகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், “முதியோர் இல்லத்திற்கான அனுமதியை கலெக்டரிடம் பேசித் தரவேண்டும், அதற்காக பணம் தேவை” என்று கூறி, வங்கி மூலம் பல தவணைகளாக மொத்தம் ₹55 லட்சம் 42 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் எந்த அனுமதியும், டெண்டரும் கிடைக்காததால் கண்ணன் விசாரித்தபோது சுதா போலியான அதிகாரி என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து தொழில் அதிபர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி, சுதா, அவரது தந்தை வெங்கட்ராமானுஜம் (72), எஞ்சினியர் சங்கரநாராயணன், பீமா பேகம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இதில் சுதா மற்றும் அவரது தந்தை வெங்கட்ராமானுஜம் கைது செய்யப்பட்டனர்.
Read more: RO வாட்டர் குடிக்கிறீங்களா..? உடலில் என்னென்ன பிரச்சனைகள் வரும்..!! நிபுணர்கள் எச்சரிக்கை..!!



