பணமோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
அமலாக்க இயக்குநரகம் (ED) அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் (Reliance Anil Ambani Group) தொடர்புடைய நிறுவனங்களின் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.. இந்த உத்தரவு 2025 அக்டோபர் 31 அன்று, பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) பிரிவு 5(1) அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது.
முடக்கப்பட்ட சொத்துகள் என்னென்ன?
மும்பை பாண்ட்ரா வெஸ்ட் பகுதியில் உள்ள பாலி ஹில் வீடு,
நியூ டெல்லி ரிலையன்ஸ் சென்டர்,
டெல்லி, நொய்டா, காசியாபாத், மும்பை, புனே, தாணே, ஹைதராபாத், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு அலுவலகங்கள், குடியிருப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் — ஆகியவை அடங்கும்.
விசாரணையின் பின்னணி
இந்த விசாரணை Reliance Home Finance Ltd (RHFL) மற்றும் Reliance Commercial Finance Ltd (RCFL) நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டிய நிதிகளை தவறாக திருப்பி பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடக்கிறது.. 2017–2019 காலத்தில், யஸ் வங்கி (Yes Bank) RHFL நிறுவனத்தில் ரூ.2,965 கோடி மற்றும் RCFL நிறுவனத்தில் ரூ.2,045 கோடி முதலீடு செய்தது.
2019 டிசம்பர் மாதத்திற்குள் இவை செயலிழந்த கடன்களாக (Non-performing assets) மாறின — RHFLக்கு ரூ.1,353.50 கோடி, RCFLக்கு ரூ.1,984 கோடி நிலுவையில் இருந்தன.
ED விசாரணையில், Reliance Nippon Mutual Fund நிறுவனம் நேரடியாக அனில் அம்பானி குழும நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது SEBI விதிகளின்படி தடைசெய்யப்பட்டிருந்தது என தெரியவந்தது. எனினும், பொதுமக்கள் முதலீடு செய்த நிதிகள் Yes Bank வழியாக மறைமுகமாக இந்நிறுவனங்களுக்கு சென்றதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
ED கண்டறிந்த முக்கிய குற்றச்சாட்டுகள்
RHFL மற்றும் RCFL நிறுவனங்கள் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு விதிமுறை மீறலுடன் கடன்கள் வழங்கியது
நிதி சுழற்சி, வழிமாற்றம் மற்றும் பணம் திருப்பிச் சுருட்டல் (Diversion & siphoning) நிகழ்ந்ததாக கண்டறிந்தது.
சில கடன்கள் அனுமதி பெறுவதற்குமுன் வழங்கப்பட்டதாக ED கூறுகிறது.
வெற்று ஆவணங்கள், தேதியிடப்படாத ஒப்பந்தங்கள், பாதுகாப்பு உருவாக்கம் இல்லாமை போன்ற குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Reliance Communications தொடர்பான விசாரணை
Reliance Communications Ltd (RCOM) மற்றும் அதன் இணை நிறுவனங்கள் தொடர்பாகவும் விசாரணையை அமலாக்கத்துறை விரிவுபடுத்தியுள்ளது. விசாரணையில், குழுமம் ரூ.13,600 கோடிக்கும் அதிகமான “எவர்க்ரீனிங் கடன்களை” (Evergreening loans) தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் ரூ.12,600 கோடி தொடர்புடைய நிறுவனங்களுக்கு மாற்றி செலுத்தப்பட்டதாகவும் ED தெரிவித்துள்ளது.. மேலும் ரூ.1,800 கோடி நிரந்தர வைப்புகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்பட்டு பின்னர் திருப்பிச் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பணப்பரிமாற்றத்தை மறைப்பதற்காக “பில் டிஸ்கவுண்டிங்” முறையை தவறாகப் பயன்படுத்தியதாகவும் ED குறிப்பிடுகிறது.
இது தொடர்பான விசாரணை தொடர்கிறது என்றும் மேலும் சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் மீது விரைவில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Read More : Flash : ஷாக்.. இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?



