தமிழ்நாடு அரசு, பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதில், ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், தற்போது வரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை, மொத்தமாக ரூ.30,000 கோடிக்கும் மேல் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் :
அதேபோல், தகுதி இருந்தும் இதுவரை உரிமைத்தொகை பெறாத மகளிரை கண்டறிந்து அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் சமீபத்தில் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில், இதுவரை உரிமைத்தொகை பெறாத சுமார் 28 லட்சம் பெண்கள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.
நவம்பர் 14-ம் தேதியுடன் இந்த முகாம்கள் முழுமையாக நிறைவடைய உள்ளதால், தகுதியுள்ள பெண்கள் உடனடியாக தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அரசு அறிவித்துள்ளது. முகாம்கள் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை உரிமைத்தொகை வரவு வைக்கப்படாததால், பலருக்கும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்படுவோமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முகாம்கள் மூலம் பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீது தற்போது கள ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் முடிவில், தகுதியுள்ள புதிய பயனாளிகளின் இறுதிப் பட்டியல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் புதிய பயனாளிகளுக்கு வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இது, மகளிர் உரிமைத்தொகைக்காகக் காத்திருந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
Read More : ஃப்ரிட்ஜில் முட்டையை வைக்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! பலருக்கும் தெரியாத உண்மை..!!



