வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி, தாங்கள் தயாரித்த பொருட்களை 100 கிலோமீட்டர் தொலைவு வரை அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு நகர்ப்புறச் சந்தைகளில் தங்கள் பொருட்களை விற்கும் அரிய வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், வேலூரில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், மொத்தம் 49,000 பயனாளிகளுக்கு ரூ.415 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ‘மகளிர் விடியல்’ பேருந்துப் பயணத் திட்டம் பெண்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதுவரை 820 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களான காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவை மற்ற மாநில முதல்வர்களையும் ஈர்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இலவச வீட்டு மனைப் பட்டா, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அடையாள அட்டை போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.



