தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்து வருகின்றனர். இந்த பணிகள் நீதிமன்ற வழக்கு, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களின் களப்பணி என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த சிறப்புத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்புப் படிவத்தில் உண்மையல்லாத அல்லது தவறான தகவல்களைப் பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் கீழ், அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வாக்காளர்கள் இந்த உறுதிமொழியைச் செய்தபின் கையெழுத்து அல்லது கைரேகை இட வேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் விநியோகிக்கும் இந்தப் படிவங்களில், வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண், பெற்றோர்/துணைவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்கள், தொகுதி மற்றும் முகவரி போன்ற முக்கியத் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது 3 முறை சென்று, இறந்தவர், இடம் மாறியவர், இரட்டைப் பதிவுகள் உள்ள வாக்காளர்களை நீக்குவதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிக்க உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களும் இந்தப் பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் முடிந்தபின், டிசம்பர் 9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் மீதான ஆட்சேபனைகளை ஜனவரி 8 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவேற்றும் வசதியும் வாக்காளர்களுக்குக் கிடைக்கிறது.
Read More : “இனி 100 கிமீ வரை இலவசம்”..!! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி..!!



