சாவரின் கோல்டு பாண்டுகள் (Sovereign Gold Bonds – SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய லாப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் நவம்பர் 6 அன்று வழங்கப்பட்ட SGB சீரிஸ்-VI பாண்டுகளின் முதிர்வு காலம் நாளையுடன் (நவம்பர் 6) முடிவடைகிறது. 8 ஆண்டுகள் முழுமையாக முதலீடு செய்தவர்களுக்கு, ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை ரூ.12,066 ஆக நிர்ணயித்து RBI தொகையைத் திருப்பி அளிக்கிறது.
2017-ஆம் ஆண்டில் இந்த SGB திட்டம் தொடங்கப்பட்டபோது, முதலீட்டாளர்கள் ஒரு கிராம் தங்கத்தை ரூ.2,961 என்ற விலைக்கு வாங்கினர். தற்போது ரூ.12,066 என்ற மீட்பு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 8 ஆண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்குக் கிட்டதட்ட 307% அபரிமிதமான மொத்த வருமானம் கிடைத்துள்ளது.
உண்மையான தங்கத்தை அல்லது Gold ETF-களைக் காட்டிலும் இந்த வருமானம் மிக அதிகம் என்று நிதியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை உயர்வினால் கிடைத்த லாபம் மட்டுமின்றி, தொடர்ச்சியாக ஆண்டுக்கு 2.5% வட்டியையும் (அரை வருடத்திற்கு ஒருமுறை) தங்கள் ஆரம்ப முதலீட்டுக்குச் சேர்த்துப் பெற்றதுதான். இந்த பாண்டுகளுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் வசதி இருந்தாலும், முழு 8 ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு இந்த முறை மிக அதிக பலன் கிடைத்துள்ளது.



