மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நம் சொந்தங்களை இழந்ததால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தோம்.. வேதனையில் அமைதி காத்த போது தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் வலைப்பின்னப்பட்டது.. சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அவற்றை துடைத்தெறியப் போகிறோம். தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக கொடுக்கப்பட்ட உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..
இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கொடுக்கப்படாத நிபந்தனைகள் நமக்கு மட்டும் விதிக்கப்பட்டது.. நாம் ஒரு இடம் கேட்டால் வேறொரு இடம் கொடுப்பார்கள்.. சட்டப்பேரவையில் முதல்வர் நம்மை பற்றி பேசிய போது வன்மம் வெளிப்பட்டது.. நம் மீதான வன்மத்தை அவர் கக்கி உள்ளார்..
தவெகவுக்கு எதிரான முதல்வரின் வன்மத்தை மக்கள் உணராமலா இருப்பார்கள்.. குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.. உச்சநீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு திக்கித் திணறி நின்றது திமுகவுக்கு மறந்துவிட்டதா? கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம்.. அரசு உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்பு ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து ஒட்டுமொத்த மக்களும் கேள்விக் கேட்க தொடங்கினர்.. இதை முதல்வர் மறந்துவிட்டாரா?
சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது எவ்வளவு வடிகட்டின பொய் என்று நான் சொல்லவில்லை.. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கின்றனர். உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் கொட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? எஸ்.ஐ.டி அமைத்த தனி நீதிபதியின் உத்தரவை கொண்டாடினார்கள்.. ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது முதல்வருக்கு தெரியாதா? இந்த அரசு நடத்தும் விசாரணையில் உச்சநீதிமன்றத்திற்கு சந்தேகம் வருகிறது என்றால் உங்கள் அரசு மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்..
இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை இப்போது ரெடி பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.. இப்பவும் சொல்கிறேன்.. 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.. இந்த போட்டி இன்னும் வலிமையாக மாறி உள்ளது.. தற்போது ஏற்பட்டுள்ள இடையூறு தற்காலிகமானது.. இயற்கையும் இறைவனும் மக்கள் சக்தியாக நம்முடன் இருக்கப் போகிறார்கள்.. 100% வெற்றி நிச்சயம் நம்பிக்கை உடன் இருங்க.. ” என்று தெரிவித்தார்..



