தங்க நகையை அடகு வைத்து கடன் எடுக்கும் பலரும், சில முக்கிய தவறுகள் காரணமாக வங்கிகளுக்கும், தனியார் நிதி நிறுவனங்களுக்கும் கொள்ளை லாபம் கொடுத்து வருகின்றனர். RBI பல முறை எச்சரித்தும், நடைமுறையில் மக்கள் அந்த பிழைகளைத் தவிர்க்கவில்லை.
தங்க நகையை அடகு வைத்து கடன் பெறுவது இன்று பலருக்கும் மிக எளிது. ஆவண சிக்கல்கள் இல்லை; சில நிமிடங்களில் பணம் கிடைக்கும். ஆனால் இதில் மறைந்திருக்கும் வட்டி சதிகள் பலருக்கும் தெரியாமல் போகிறது. பலர் ஆண்டு முடிவில் நகைக்கு வட்டியை மட்டும் கட்டி, மீண்டும் அதே நகையை அடகு வைக்கிறார்கள். உதாரணமாக, ₹2 லட்சம் கடனுக்கு 10.75% வட்டி என்றால், ஓராண்டு முடிவில் ₹21,500 வட்டியாகும். இதை மூன்று ஆண்டுகள் தொடர்ந்தால் ₹64,000 வரை வட்டியே செலுத்தியிருப்பீர்கள். ஆனால் நகை இன்னும் வங்கியில்தான்.
மாறாக, மாதந்தோறும் ₹8,000 கட்டி வந்தால் 28 மாதங்களில் கடனை முழுமையாக முடிக்கலாம்; மொத்தமாக ₹2,24,000 மட்டுமே செலுத்துவீர்கள். அதில் வெறும் ₹24,000 தான் வட்டி. சில தனியார் நிறுவனங்கள் 22% வரை வட்டி வசூலிக்கின்றன. ₹2 லட்சம் கடனுக்கு மாதம் ₹3,586 வட்டி. மூன்று ஆண்டுகள் வட்டியை மட்டும் கட்டினால் ₹1,29,000 வட்டியே போய்விடும். பலர் இந்த வழியிலேயே நகையை மீட்க முடியாமல் பறிகொடுக்கின்றனர்.
பொதுத்துறை வங்கிகள் பாதுகாப்பானது: பொதுத்துறை வங்கிகள் சுமார் 8.4% வட்டியில் தங்கக் கடன் வழங்குகின்றன. இங்கு வட்டி குறைவு என்பதால், நகையை எளிதில் மீட்டெடுக்க முடியும்.
அதிகபட்ச மதிப்பில் நகையை தனியார் வங்கிகளில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்க வேண்டிய நிலை வருகிறது என்றால், ஓரிரு மாதத்திற்குள் நகையை திருப்ப முடியும் என்றால் மட்டும் வைக்கவும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கி நகையை இழந்துவிடுவீர்கள்.. அதேபோல் நகையை அடகு வைக்கும் போது வட்டி குறைவாக இருக்கும் வங்கிகளை தேர்வு செய்து அடகு வையுங்கள்.
Read more: ஐபிஎல் 2026-ல் எம்எஸ் தோனி விளையாட மாட்டாரா?. சிஎஸ்கே உரிமையாளர் சொன்ன அப்டேட்!.



