கேரளா சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையும், ‘ஸ்டார் மேஜிக்’ கேம் ஷோ போட்டியாளருமான ஜஸீலா, தனது முன்னாள் காதலன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நீதி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுவதாக கூறி, தான் கடந்து வந்த சோகமான அனுபவத்தை விளக்கி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜஸீலா தனது பதிவில், “நான் பரிதாபத்திற்காக இந்தப் பதிவை வெளியிடவில்லை. ஆதரவு மற்றும் சரியான வழிகாட்டுதல் தேவை என்பதற்காகவே இதைச் செய்கிறேன்” என்று கூறியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, தனது அப்போதைய காதலரான டான் தாமஸ் வித்தையத்திலுடன் அவரது அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் நடத்தை குறித்துப் பேசியபோதுதான் சண்டை ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வாக்குவாதம் முற்றியபோது, டான் தாமஸ் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கியதாக ஜஸீலா குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதல் குறித்து விவரித்த அவர், “அவர் என் வயிற்றில் உதைத்தார், முகத்தில் குத்தினார், நான் தரையில் விழுந்தபோது என் தலையைத் தரையில் மோதினார், என்னை இழுத்துச் சென்றதுடன், என் அக்குள் மற்றும் தொடைகளிலும் கடித்தார். உலோக வளையல் கொண்டு என் முகத்தில் பலமாக தாக்கியதில் எனது மேல் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
காயம் ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கெஞ்சியும் அவர் கேட்கவில்லை என்றும், போலீஸுக்கு அழைக்க முயன்றபோது தொலைபேசியைப் பறித்துக்கொண்டார் என்றும் ஜஸீலா தெரிவித்துள்ளார். பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர், தான் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததாகப் பொய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
பின்னர், அவர் சன்ரைஸ் மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ததாகவும், ஆனால் அதன் பின்னரும் துன்புறுத்தல் தொடர்ந்ததாகவும் ஜஸீலா கூறியுள்ளார். தனிமையிலும், வேதனையிலும் இருந்த ஜஸீலா, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உடைந்துபோன நிலையில், முதலில் ஆன்லைனில் புகார் அளித்தும் பதில் கிடைக்காததால், ஜனவரி 14ஆம் தேதி நேரடியாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இருப்பினும், முன்னாள் காதலன் முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்த பின்னரே போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்தனர். தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. வழக்கின் இப்போதைய நிலை குறித்துப் பேசியுள்ள ஜஸீலா, “எனது காயம் மிகவும் கடுமையானது. ஆதாரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் மிகத் தெளிவாக உள்ளன. ஆனால், எதிர்தரப்பினர், நான் ஒப்புக்கொள்ளாத ஒரு சமரசத்தை காரணம் காட்டி, வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் பல மாதங்களாக வழக்கு விசாரணை தாமதமாகிறது. என்னால் வழக்கறிஞரை நியமிக்க முடியாததால், நான் தனி ஆளாக நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். விசாரணை நடந்தபோது, நீதிமன்ற அறைக்குள் நான் கண்ணுக்குத் தெரியாதவளாக உணர்ந்தேன். எனக்குப் பேசக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை,” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
ஒரு கலைஞராக முகம் தனக்கு அடையாளம் என்று குறிப்பிட்டுள்ள ஜஸீலா, இந்தத் தாக்குதலால் மாதக்கணக்கில் வேலையின்றி உடல் மற்றும் மன ரீதியான அதிர்ச்சி, நிதி இழப்பு மற்றும் மனச்சோர்வு மூலம் தான் கடந்து வந்ததாக கூறியுள்ளார். “ஆனால், இதைக் கொடூரமாகச் செய்தவர் தன் வாழ்க்கையைத் தொடர்வதுடன், மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை தாமதப்படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான் – வழக்கை விசாரணைக்கு அனுப்புங்கள். ஆதாரங்கள் பேசட்டும். உண்மை கேட்கப்படட்டும். தேவைப்பட்டால் எனது வழக்கை நானே வாதிடவும் தயாராக இருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்” என்று ஜஸீலா கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கை ரத்து செய்வதற்கான மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்கை விசாரணைக்கு நகர்த்துவது எப்படி என்று வழிகாட்ட எந்த வழக்கறிஞராவது உதவினால் நன்றியுடையவளாக இருப்பேன் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது எனக்காக மட்டுமல்ல, இந்த அமைப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் என்னுடைய போராட்டம். தயவுசெய்து எனக்கு ஆதரவாக நில்லுங்கள் என்று கூறி ஜஸீலா தனது பதிவை முடித்துள்ளார். உடற்தகுதி ஆர்வலரான ஜஸீலாவின் இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.



