மதுரை – தூத்துக்குடி தேசிய 4 வழிச்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து நேற்று மதியம் 2.35 மணியளவில் திருச்செந்தூர் நோக்கி 25 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த குளிர்சாதன அரசுப் பேருந்தானது, மாலை 4.30 மணியளவில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் வந்துள்ளது. பேருந்தை மதுரை பேரையூரைச் சேர்ந்த நல்லுசாமி (45) ஓட்டி வந்துள்ளார். பரமக்குடியைச் சேர்ந்த ஜெயராமன் (47) நடத்துநராக பணிபுரிந்துள்ளார்.
அப்போது, சாலையோரம் பழுதாகி நின்றிருந்த தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. அப்போது, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் நல்லுசாமி மற்றும் பேருந்தில் பயணித்த மும்பை மாட்டுங்காவைச் சேர்ந்த மகேஷ் (31) ஆகிய இருவரும் உடல் நசுங்கிக் கடுமையாக போராடினர். இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தை அடைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மகேஷின் மனைவி வினிதா (31), தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் ரேணுகாதேவி (24), விளாத்திகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் (29), காஞ்சீபுரம் ஸ்டாலின் (45), எடப்பாடி லோகேஷ்வரன் (33), மதுரை பாண்டியன் (34), நடத்துநர் ஜெயராமன் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஓட்டுநர் நல்லுசாமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகேஷ் தனது மனைவி வினிதாவுடன் திருச்செந்தூர் நோக்கிப் பயணித்த நிலையில் விபத்தில் சிக்கியுள்ளார். கணவரைப் பறிகொடுத்த வினிதா கதறி அழுதது அங்கிருந்தவர்களை பரிதாபத்தில் ஆழ்த்தியது.
எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துக் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தண்ணீர் லாரி ஓட்டுநர் சண்முகராஜிடம் (38) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : வெள்ளிக்கிழமை முருகனை வழிபட்டால் வாழ்க்கை செழிக்கும்..!! இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் வழிபடுங்க..!!



