தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, தனிப்பட்ட தேவைகள், வேலை மற்றும் கல்வி எனப் பலவற்றிற்காக தங்களுக்குப் பிடித்தமான, பொருளாதார நிலைக்கேற்ற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, ஸ்மார்ட்போன் பயனர்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
ஐபோன் (iPhone) விலை அதிகம் என்றாலும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மிக அதிகம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கூடுதல் பணம் செலவழித்து அதை வாங்குகின்றனர். ஆண்ட்ராய்டு (Android) போன்களில் பாதுகாப்பு சிக்கல்கள் அதிகம் இருக்கும் என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது. ஆனால், இந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில், சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு முடிவு, ஐபோன் பயனர்களுக்குப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டை விட ஐபோனில் அதிக மோசடியா..?
இதுவரை பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ‘ஐபோன் பாதுகாப்பு’ என்ற கருத்து முற்றிலும் தவறு என்று ஓர் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டில் எந்த பயனர்கள் அதிக அளவில் மோசடிகளை (Scams) எதிர்கொள்கின்றனர் என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், யாரும் எதிர்பாராத விதமாக, ஐபோன் பயனர்கள் தான் அதிக மோசடிகளில் சிக்குவது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை கூகுள் (Google) நிறுவனமும், யோவ்கோவ் (YovGov) என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ளன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்த மக்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக, இந்தியா மற்றும் பிரேசிலில் இருந்து மட்டும் சுமார் 5,000 ஸ்மார்ட்போன் பயனர்களிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வின் முடிவுகள் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டன. அதாவது, பெரும்பாலான ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களுக்கு இதுவரை எந்தவிதமான தேவையற்ற ஸ்பேம் அல்லது மோசடி குறுஞ்செய்திகள் வந்ததில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு நேர்மாறாக, 58 சதவீத ஐபோன் பயனர்கள் தாங்கள் மோசடி செய்யும் குறுஞ்செய்திகளை பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதன்மூலம், விலை அதிகமான ஐபோன்களை பயன்படுத்துவதால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிடும் என்ற பொதுவான கருத்து இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
Read More : வருங்காலத்தில் AI என்னவெல்லாம் செய்யும்..? மனித வாழ்க்கை எப்படி இருக்கும்..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!



