பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்ரேல் அக்பர் அலி அன்சாரி என்ற சமீர் பிஹாரி (சமீர்) என்ற கட்டிட தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தன் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீர் பிஹாரி, அவரது மனைவி ரூபி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 5 ஆண்டுகளாக அகமதாபாத்தில் உள்ள அஹமதி ரோ என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூபிக்கு இம்ரான் என்ற நபருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமீருக்கு தெரியவந்தபோது, அவர் தனது மனைவியைக் கடுமையாக கண்டித்து அடித்துள்ளார்.
கணவனின் கண்டிப்பால் தனது கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்டதால், கணவனை கொன்றுவிட ரூபி திட்டமிட்டார். இதையடுத்து, காதலன் இம்ரான் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சமீரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக, ரூபி மற்றும் அவரது காதலன் இணைந்து, சமீரின் உடலை சமையலறை மேடையின் அடியில் புதைத்து, அதன் மீது சிமெண்ட் போட்டு டைல்ஸ் பதித்துள்ளனர்.
கணவன் காணாமல் போனது பற்றி அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது, சமீர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டார், இன்னும் திரும்பி வரவில்லை என்று ரூபி நாடகமாடியுள்ளார். மேலும், சமீரின் உடலை புதைத்த அதே வீட்டில்தான், அவருடைய காதலன் இம்ரானுடன் ரூபி சுமார் ஒரு ஆண்டுகாலமாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். புதைக்கப்பட்ட அதே சமையலறை மேடையின் மீது சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்த இந்த கொடூர செயல், அப்பகுதி மக்களைப் பதற வைத்துள்ளது.
சமீர் காணாமல் போனது குறித்து போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கள்ளக்காதலன் இம்ரானைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இம்ரான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், உடலை புதைத்த இடத்திற்கும் போலீஸாரை அவரே அழைத்துச் சென்றார். பின்னர், சமையலறை மேடையை தோண்டிப் பார்த்தபோது, அங்கிருந்து சமீரின் எலும்புக் கூடுகள், முடி மற்றும் திசுக்கள் ஆகியவை மீட்கப்பட்டன. இவை DNA சோதனைக்காகப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரூபி மற்றும் அவரது கள்ளக்காதலன் இம்ரான் ஆகியோரை கைது செய்த போலீஸார், இந்தக் கொலைக்கு உதவியாக இருந்த மேலும் இரண்டு நண்பர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : பால், தயிர் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்..!! தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?



