இந்தியாவின் உச்சநீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷமியின் மனைவியாக இருந்த ஹசீன் ஜஹான், தன்னுக்கும் மகளுக்கும் வழங்கப்பட்ட மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்துமாறு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு தொகை குறித்த மனு
கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்பு ஹசீன் ஜஹானுக்கும் அவரது மகளுக்கும் மாதம் ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.2.5 லட்சம் என மொத்தம் ரூ. 4 லட்சம் பராமரிப்பு தொகை நிர்ணயித்தது. ஆனால், ஹசீன் ஜஹான் அந்தத் தொகை ஷமியின் வருமானத்தையும் வாழ்க்கை முறையையும் கருத்தில் கொண்டால் போதுமானதல்ல என வாதிட்டுள்ளார்.
அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஷமியின் வருமானத்துக்கு ஏற்ப பராமரிப்பு தொகையை உயர்த்த வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
உச்சநீதிமன்றம் கருத்து
விசாரணையின் போது, உச்சநீதிமன்ற அமர்வு, “மாதம் ரூ. லட்சம் என்பது ஏற்கனவே பெரிய தொகையல்லவா?” என்று குறிப்பிட்டது. இருப்பினும், நீதிமன்றம் ஷமிக்கும் மேற்கு வங்க அரசுக்கும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு டிசம்பர் மாதத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
ஹசீன் ஜஹானின் வாதம்
ஹசீனின் வழக்கறிஞர், ஷமியின் உண்மையான வருமானம் தற்போது நீதிமன்றம் நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு அதிகம் என கூறினார். மேலும் “அவர் 100 கோடிகளுக்கு மேல் சொத்துக்களைக் கொண்டவர். ஆடம்பர கார்கள், வெளிநாட்டு பயணங்கள், மிகுந்த செழுமையான வாழ்க்கை வாழ்கிறார்.. இவற்றை எல்லாம் பார்த்தால் அவர் அளவுக்கு அதிக வருமானம் பெறுகிறார்,” என வாதிட்டார்.
மேலும், மனுவில், ஷமி பல மாதங்களாக பராமரிப்பு தொகையைச் செலுத்தாமல் தவறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹசீன் ஜஹான், “என் கணவரின் வருமானத்தில் எனக்கு தனிப்பட்ட உரிமை வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் எங்கள் மகளுக்கு தந்தையின் வாழ்க்கை தரத்துக்கேற்ற வகையில் வாழும் உரிமை இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, “அவள் தந்தையின் சமூக வட்டார குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிக்கவும், மரியாதையுடன் வாழவும் உரிமை பெற்றிருக்கிறாள்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
ஷமி மற்றும் ஹசீன் ஜஹான் இடையேயான இந்த நீண்டநாள் சட்டப்போராட்டம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது ஹசீன் ஜஹான், முகமது ஷமி மீது உடல் மற்றும் மன ரீதியான கொடுமை, வரதட்சணை தொந்தரவு, நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். அதன்பிறகு இருவருக்குமிடையேயான உறவு நீதிமன்றத்திலும், ஊடகங்களிலும் சர்ச்சையாக மாறியது.
ஷமியின் பதில்
முகமது ஷமி இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவாக கருத்து தெரிவிக்காமல் இருந்துள்ளார். முன்பு அளித்த பேட்டியில் “கடந்ததைப் பற்றி வருத்தமில்லை. என்ன நடந்ததோ அது முடிந்தது. யாரையும் குற்றம் சொல்ல விருப்பமில்லை.. நான் என் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்..
இப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, ஷமி மற்றும் மேற்கு வங்க அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு வழக்கு மீண்டும் டிசம்பரில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..



