திருமண தடை, குழந்தை பாக்கியம், கர்ப்பிணிகள்..!! இந்த முருகன் கோயிலுக்கு சென்று வந்தாலே போதும்..!! எங்கிருக்கு தெரியுமா..?

Murugan 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் தனிப்பட்ட சிறப்பம்சம் என்னவென்றால், கர்ப்பிணி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று இங்குள்ள அர்த்த மண்டபத்தில் வேலி வளையல்களை கட்டி வழிபடுவது வழக்கம். அவ்வாறு செய்வதால் அவர்களின் பிரசவம் எளிமையாகும் என்பது பல காலமாக அங்கு நிலவும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.


இங்கு மூலவராக பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். கந்த சஷ்டி, கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்குரிய விசேஷ தினங்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும்.

பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம், பால்குடம், காவடி எடுத்தல் மற்றும் காதுகுத்துதல் போன்றவற்றின் மூலம் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறவும் இக்கோவிலில் வந்து முருகனை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் ஆழமாக நம்புகின்றனர்.

முருகனே வந்து அருள்பாலித்த அதிசயம் :

குமரமலை கோவில் உருவானதற்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு தல வரலாறு இப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. குமார மலையையடுத்த குன்றக்குடி பட்டி கிராமத்தை சேர்ந்த சேதுபதி என்ற தீவிரப் பழனி முருக பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து, பழனிக்குக் காவடி எடுத்து நடந்து சென்று வழிபட்டு வருவது வழக்கம்.

அவருக்கு 80 வயதான நிலையில், முதுமையின் காரணமாக காவடியை தூக்கிக்கொண்டு நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். இதனால் மனதளவில் அவர் வேதனையுற்றார். ஒரு நாள் இரவில், அவருக்குப் பழனி மலை ஆண்டவரே கனவில் தோன்றி, “நான் குமரமலை குன்றின் மீது சங்கம் செடிப் புதருக்கு அருகில் நாளை வந்து தங்குகிறேன். அந்த இடத்தில் உனக்காக விபூதிப் பை, ருத்ராட்ச மாலை, பிரம்பு மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும். அங்கு வந்து நீ என்னை தரிசிக்கலாம்,” என்று கூறி மறைந்தார்.

மறுநாள் அந்தச் சேதுபதி, கனவில் முருகன் குறிப்பிட்ட இடமான குமரமலைக்குச் சென்று பார்த்தபோது, சுவாமி கூறிய அத்தனை பொருட்களும் அங்கிருந்தன. அன்று முதல், அந்த இடத்தில் ஒரு வேலை நட்டு வைத்து அவர் வழிபடத் தொடங்கினார். காலப்போக்கில், அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி, பாலமுருகன் சிலையை வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டது. அந்தச் சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்று பெயரிடப்பட்டது. இறுதியாக, 1898ஆம் ஆண்டில் பல்லவராயர்கள் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் நடத்தியதாகவும், இந்த ஆலயம் அன்று முதல் இன்று வரை செழித்து வளர்ந்து வருவதாகவும் இந்தக் கோவில் வரலாறு சொல்கிறது.

Read More : Alert: தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை…!

CHELLA

Next Post

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி..!! அலுவலர்கள் வீட்டிற்கு வரும்போது இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!!

Sat Nov 8 , 2025
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர். கள ஆய்வுப் பணி விவரங்கள் : வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), இந்த கணக்கெடுப்பின்போது […]
SIR 2025

You May Like