நாட்டில் உள்ள பல அரசு வங்கிகளை (பொதுத்துறை வங்கிகள்) ஒன்றாக இணைத்து, உலக அளவில் போட்டி போடும் திறன் கொண்ட மிகப் பெரிய வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியுடனும் (RBI), வங்கித் துறைத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இப்போது நிறைய சிறிய அரசு வங்கிகள் உள்ளன. அவற்றுக்குப் பதிலாக, எண்ணிக்கையில் குறைவான, ஆனால் நிதி ரீதியாக மிகவும் வலிமையான சில வங்கிகளை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். இப்படி வலிமையான வங்கிகள் உருவானால், அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய பெரிய கடன்களை எளிதாக கொடுக்க முடியும். மேலும், அரசின் புதிய நிதிச் சட்டங்களையும் சீர்திருத்தங்களையும் இந்த வங்கிகள் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.
எந்தெந்த வங்கிகள் இணையலாம்..?
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI), பேங்க் ஆஃப் இந்தியா (BOI) போன்ற சில வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கி (SBI) அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) போன்ற மிகவும் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இந்த இணைப்பு குறித்து அரசு எந்த ஓர் உறுதியான அறிவிப்பையும் இன்னும் வங்கிகளுக்கு அனுப்பவில்லை. பெரும்பாலான அரசு வங்கிகள் இப்போது, அரசின் பங்குகளை சற்றுக் குறைத்து, சட்டப்படி இருக்க வேண்டிய பொதுமக்களின் பங்குதாரர் அளவைப் பூர்த்தி செய்யும் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனாலும், நிதியமைச்சரின் இந்தப் பேச்சு, இந்தியாவின் வங்கிகளின் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்கள் வரும் என்பதை காட்டுகிறது.



