மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைகள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோருடன் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில், “எங்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஜெயராம் என்பவர் மாணவிகளை தொட்டுப் பேசுவது, சில்மிஷத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும், அவர் ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் தொந்தரவு அளிப்பதுடன், மாணவிகளை தனியாக வரவழைத்துச் சீண்டலிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் எங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது” என்று கூறியிருந்தனர்.
ஆசிரியரின் இந்தச் செயல்பாடுகள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை பொற்செல்வி மற்றும் உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாணவிகள் குற்றம்சாட்டினர். மாறாக, வகுப்பறையில் இருந்த கேமராக்களை வேறு பகுதிக்கு மாற்றி வைத்து, பாலியல் தொந்தரவுக்கு அவர்களும் உடந்தையாக செயல்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை மற்றும் உதவி தலைமை ஆசிரியை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, இந்தப் புகார் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் ஆசிரியர் ஜெயராம், தலைமை ஆசிரியை பொற்செல்வி, மற்றும் உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



