தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்பு சேவைக்கு தகவல் கிடைத்தது.
இந்த வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் 12 பேர் காயமடைந்தனர். ஒரு காரில் குண்டுவெடித்த நிலையில், பல வாகனங்களும் தீப்பிடித்து சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை ஆய்வு செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.. முன்னதாக டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சாவிடம் அமித்ஷா பேசினார்.. உளவுத்துறை இயக்குநருடன் அமித்ஷா தொடர்பில் உள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படை (NSG), தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தடயவியல் துறையின் குழுக்களும் சம்பவம் நடந்த இடத்தை அடைந்தன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் குழுவும், CRPF டிஐஜியும் வெடிப்பு நடந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமித்ஷா “இன்று மாலை 7 மணியளவில் சுபாஷ் மார்க் சந்திப்பு சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு நடந்துள்ளது. சம்பவம் நடந்த 10 நிமிடத்தில் டெல்லி போலீசார் அங்கு வந்துள்ளனர். NSG, NIA ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன.
சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. சம்பவ இடத்திற்கு நான் செல்ல இருக்கிறேன். மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தோரை சந்திக்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்..
அமித்ஷா விரைவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட உள்ளதாகவும், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..



