பாகிஸ்தான் நாடு வரலாறு காணாத மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அந்நாட்டின் முக்கியச் சேவை அமைப்பான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளால் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் பற்றிப் பேசிய ஜப்பார் அப்பாஸ், நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகளின் தோல்வியை வெளிப்படுத்தினார். “இளைஞர்கள் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 20 லட்சம் வரை செமஸ்டர் கட்டணம் செலுத்திப் பட்டம் பெறுகிறார்கள். ஆனால், பட்டம் பெற்ற பிறகு அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, அல்லது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை மட்டுமே மாத சம்பளமாகப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
“ஓர் இளைஞன் இவ்வளவு வருடங்கள் படித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடக்கூட போதாத சம்பளத்தில் வேலைக்குச் சென்றால், அவன் எப்படி மரியாதையுடன் வாழ முடியும்? அவர்களுக்கு நாங்கள் என்ன மாதிரியான எதிர்காலத்தை வழங்குகிறோம்?” என்று அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசு தவறியதை ஜப்பார் அப்பாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ள மக்கள், தற்கொலை எண்ணம், திருட்டு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மருத்துவமனைகளுக்கு வரும் இளைஞர்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒருவருக்கு, வேலையின்மை மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையே முக்கியக் காரணமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத வருமானமாக வெறும் 18,000 முதல் 28,000 ரூபாய் மட்டுமே ஈட்டும் குடும்பங்களுக்கு, லட்சக்கணக்கில் மின்சாரக் கட்டணம் வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மிடில் கிளாஸ் மக்கள் பூமிக்குள் புதைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
மக்கள் தற்போது தங்கள் நகைகளையும், திருமணச் சேமிப்புகளையும் விற்று மின் கட்டணத்தையும், பள்ளி கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், மக்கள் பேராசைக்காக அல்ல, பசிக்காக கடைகளை சூறையாடும் நாள் வெகு விரைவில் வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Read More : கள்ளக்காதலிக்காக மொத்த பணத்தையும் செலவு செய்த ரியல் எஸ்டேட் அதிபர்..!! மகன் கண்முன்னே நடந்த பயங்கரம்..!!



