கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவுக்கு அண்டை மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு வரும் 26ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 26ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 20ஆம் தேதியன்று வேலை நாளாக இருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல், காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போது முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள்.
இதனை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி காரைக்காலில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.