உலக அளவில் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில், இந்தியா 9-வது இடத்தில் இருப்பதாக காலநிலை அபாய குறியீடு (CRI – Climate Risk Index) அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. புயல், சுனாமி, நிலநடுக்கம், தொடர் வெள்ளம் என பல்வேறு வகையிலான பேரிடர்களால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் (1995-2024) மட்டும் நாடு சுமார் 430 மிக கடுமையான இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் பேரழிவுகளின் விளைவாக, இதுவரை சுமார் 80,000 மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகளில் 1.3 பில்லியன் மக்களைப் பாதித்த பேரிடர்கள் :
2026 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், 1995 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் காலநிலை பேரழிவுகளால் சுமார் 1.3 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புவி வெப்பமயமாதலின் காரணமாக தொடர்ச்சியான வெள்ள பாதிப்புகள், சுனாமி மற்றும் வெப்ப அலைகள் போன்றவற்றை இந்தியா தொடர்ந்து சந்தித்து வருகிறது.
குறிப்பாக, 1998 குஜராத் புயல், 1999 ஒடிசா புயல் மற்றும் 2013 உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு போன்ற மிகத் தீவிரமான நிகழ்வுகள், உலக அபாயக் குறியீடு அமைப்பின் அறிக்கையில் இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்ததற்கு வழிவகை செய்துள்ளன.
தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் மையம் :
தனிமைப்படுத்தப்பட்ட பேரழிவுகளை (Isolated Disasters) விட, தொடர்ச்சியான வானிலை மாற்றங்கள் காரணமாக இந்தியா தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் மையமாக மாறியிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகையும், பருவமழைக் காலங்களில் ஏற்படும் தீவிர மாற்றங்களும் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கி வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா மிக கடுமையான பருவமழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டது. அந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் குஜராத், மகாராஷ்டிரா, திரிபுரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் என்றும் CRI அறிக்கை விவரிக்கிறது.
உலகளாவிய இழப்புகள் :
இந்த 30 ஆண்டு கால இடைவெளியில், உலக அளவில் சுமார் 9,700 இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சுமார் 8.3 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், உலகளவில் சுமார் 5.7 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு, 4.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : ஆயுளை நீட்டிக்கும் ஜப்பான் டெக்னிக்..!! 6-6-6 நடைபயிற்சி முறையின் ஆரோக்கிய பலன்கள்..!!



