2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம், இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என பிரதானமாக 4 முனைப் போட்டி நிலவும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க., தனது வலுவான கூட்டணிக் கட்டமைப்பை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, எதிர்வரும் தேர்தலிலும் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்ற நம்பிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மறுமுனையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல், தனித்தே போட்டியிடுவது என்ற கொள்கை தெளிவுடன் களத்தில் தனி ஆளாக தனது கட்சியை வழிநடத்தி வருகிறார்.
இதற்கிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இக்கூட்டணியை பலப்படுத்தி, ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதில் முனைப்புக் காட்டி வருகிறார்.
இந்த இரு பெரும் திராவிட கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு நடுவே, நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்து அரசியல் களத்தில் குதித்தார். விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் தீவிரம் காட்டின.
இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், ‘முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான்; நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை; சட்டமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் காரணமாக, தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய 4 கட்சிகள் அல்லது அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, இந்த தகவலை அறிந்த முதலமைச்சர் முக.ஸ்டாலின், தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு கட்சியில் முக்கிய பதவி..!! அதிர்ச்சியில் அதிமுக..!!



