தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு அடி முதல் அதிகபட்சம் 8 அடி வரை மழை நீரானது தேங்கி இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, செல்வ விநாயகர் புரம், தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ரஹ்மத் நகர், கந்தன் காலனி, பி அன் டி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு சென்று தங்கி உள்ள சூழ்நிலை நிலவி வருகிறது.
பல இடங்களில் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதனால் 100 % வெள்ள நீர் ஊருக்குள் வரும் என்பதால் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரசு வாகனங்களைக் கொண்டு ஊர் மக்களை 100% அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மிகவும் மோசமான நிலைமையை எதிர்கொண்டு வருகிறோம். இதனால் மக்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறி அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். நேரம் மிக குறைவாக உள்ளது. வெள்ள நீர் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், உடனடியாக மக்களை முழு வேகத்தில் வெளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.