சமீபகாலமாக, உடல் எடையை குறைக்கும் முயற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்கள் மத்தியில், சுரைக்காய் ஜூஸ் (Lauki Juice) மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்தப் பானம் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், பல அரிய மருத்துவப் பலன்களையும் அளிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் எடை குறைப்பு: சுரைக்காயில் கலோரிகள் மிகக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால், தேவையற்ற உணவு தேவைகளை தவிர்த்து, எடை குறைப்புக்கு உதவுகிறது.
சீரான செரிமானம்: இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளை தடுக்கிறது.
உடல் குளிர்ச்சி: சுரைக்காய் ஜூஸ் உடலின் வெப்பத்தை குறைத்து, குறிப்பாக கோடை காலங்களில் உடலை நீரேற்றத்துடன் (Hydrated) வைக்க உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்: இது இயற்கையாகவே சிறுநீர் பெருக்கியாகச் செயல்படுவதால், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
எப்படி அருந்த வேண்டும்..?
சுரைக்காய் ஜூஸை தயாரிக்கும்போது, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறிதளவு இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து அரைப்பது சுவையை அதிகரிக்கும். அதேபோல் சுரைக்காய் ஜூஸ் கசப்புத்தன்மையுடன் இருந்தால், ஒருபோதும் அருந்தக் கூடாது என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
கசப்பான சுரைக்காயில் உள்ள நச்சுத்தன்மை வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, எப்போதும் சுவையில் இனிப்பு அல்லது நடுநிலையாக உள்ள சுரைக்காயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த குளிர்ச்சி பானத்தை அருந்துவது, அதன் ஆரோக்கிய பலன்களை முழுமையாக பெற உதவும்.
Read More : நிலம், வீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கே வர மாட்டீங்குதா..? இந்த நாளில் வராஹி தேவியை இப்படி வழிபடுங்க..!!



