வேலையில் இருக்கும் ஆர்வம் மற்றும் அழுத்தம் காரணமாக பலரும் தங்கள் மதிய உணவை தவிர்ப்பது இன்று மிகவும் பொதுவான பழக்கமாகிவிட்டது. காலை உணவை தவிர்த்துவிட்டு, வெறும் காஃபி அல்லது டீயுடன் நாளை தொடங்கி, மதிய உணவையும் தவிர்ப்பது மிகவும் மோசமான பழக்கமாகும். இதனால், பணியிடத்தில் நீங்கள் கெட்டிக்காரராகப் பெயர் வாங்கலாம். ஆனால், உங்கள் உடல்நலத்தைப் பராமரிப்பதில் நீங்கள் பூஜ்ஜியமாகி விடுகிறீர்கள். தொடர்ந்து இவ்வாறு இருப்பது, உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதைத் தடுக்கிறது, நாளடைவில் இது மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்சினைகளை உருவாக்கும்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், வேலையில் ஒருமித்த கவனம் செலுத்துவதற்கும் உடலுக்குச் சரியான நேரத்தில் ஆற்றல் தேவை. உணவைத் தவிர்ப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. இது பலவீனம், தலைச்சுற்றல், எரிச்சல் மற்றும் கவனச்சிதறலை ஏற்படுத்தும். மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால், அதிக கோபம், சோம்பல், பதட்டம் மற்றும் சரியான முடிவெடுப்பதில் சிக்கல் போன்ற மனரீதியான பிரச்சினைகளும் எழுகின்றன. மேலும், சரியான நேரத்தில் சாப்பிடாதவர்களுக்கு மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாகச் சுரக்கிறது.
இது உங்களை தொடர்ச்சியான பதட்டத்திலேயே வைத்திருக்கும். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, மனச்சோர்வு மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சினைகள் உருவாகின்றன. செரிமானக் கோளாறுகள், நீரிழிவு, இதயப் பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியமற்ற துரித உணவுகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பது போன்ற நீண்ட கால நோய்களுக்கு இதுவே காரணமாகிவிடும்.
இந்த ஆபத்துகளை தவிர்க்க, மறுநாளுக்கான உணவை முந்தைய இரவே திட்டமிடுவது நல்லது. ஒருவேளை மதிய உணவு சாப்பிட நேரம் கிடைக்காவிட்டால், அதற்காக பட்டினி கிடக்காமல், ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் வகைகள், பழங்கள் அல்லது ஸ்மூத்தி போன்ற ஆரோக்கியமான ஒன்றைச் சாப்பிட்டு உடனடியாக ஆற்றலைப் பெற வேண்டும். வெறும் வயிற்றில் டீ அல்லது காபியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மேலும், சோர்வு பசியால் மட்டுமல்ல, போதுமான நீர் குடிக்காததாலும் ஏற்படலாம். எனவே, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம். சரியான இடைவெளியில் உணவை எடுத்துக்கொள்வது ரத்த சர்க்கரை அளவைச் சீராகப் பராமரித்து, வேலையில் கவனத்தை மேம்படுத்தும். நாம் வாழ்வதற்காகத் தான் வேலை செய்கிறோம், வேலைக்காக வாழவில்லை என்பதை உணர்ந்து, எவ்வளவு வேலை இருந்தாலும், சாப்பிட்ட பிறகு வேலையைத் தொடங்குவதுதான் புத்திசாலித்தனம்.



