சென்னை தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள இராமச்சந்திரா தெருவில் அமைந்திருக்கும் ‘மங்கள வில்லா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் கிரிதர் என்பவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், கிரிதர் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தமிட்டவாறே உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால், அந்தப் பகுதி முழுவதும் அனல் காற்றுடனும், அடர்த்தியான கருப்புப் புகையுடனும் சூழ்ந்தது.
தீயின் காரணமாக, மூன்றாவது தளத்தில் வசித்து வந்த குடும்பத்தினர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பதற்றமடைந்த அவர்கள், உயிரை காத்துக்கொள்ள மொட்டை மாடிக்கு ஓடித் தஞ்சம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மொட்டை மாடியில் சிக்கியிருந்த 6 பேரை, ‘ஸ்கை லிப்ட்’ எனப்படும் சிறப்பு வாகனம் மூலம் பத்திரமாக மீட்டுக் கீழே கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தின் போது, மூன்றாவது தளத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் 72 வயதான டாக்டர் வரதராஜன் மற்றும் அவரது மனைவி மலர் ஆகியோர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தனர். அவர்களை மீட்க முடியாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்று இருவரையும் மீட்டனர். அதிகப் புகை காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர்களை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : மதிய உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? ஆபத்து வரப்போகுது..!! இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்..!!



