உலகமே கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அதுபோன்ற ஒரு புதிய பெருந்தொற்றை உருவாக்கும் ஆபத்து நிறைந்த ஒருவகை வைரஸ் பாதிப்பு தற்போது மனிதர்களிடையேயும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அடுத்து ஒரு உலகளாவிய பெருந்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டு, கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர பல ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்காவில் ஒருவருக்கு H5N5 பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடத்தில் இந்த குறிப்பிட்ட வகை பறவை காய்ச்சல் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்பதால், உலகெங்கும் சுகாதார அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அமெரிக்காவின் கிரேஸ் ஹார்பர் கவுண்டியை சேர்ந்த ஒரு முதியவருக்கே இந்த H5N5 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சில உடல்நலப் பிரச்சனைகளை கொண்டவர் என்றும், கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருக்கு இந்த வைரஸ் எப்படிப் பரவியது என்பது இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. எனினும், அவர் வீடுகளில் வளர்க்கும் கோழிகள் மூலமாக இத்தொற்று பரவியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பறவை காய்ச்சல் பொதுவாக பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் எச்சில், சளி அல்லது கழிவுகள் மூலம் பரவுகிறது. ஆடு, மாடுகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அதன் பால் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. பெரும்பாலும், இடம்பெயரும் பறவைகள் வீட்டுப் பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் இதன் பரவல் அதிகமாகிறது.
தற்போது வரையிலும் கண்டறியப்பட்டுள்ளதில் ஆறுதல் தரும் ஒரே விஷயம் என்னவென்றால், இந்த H5N5 வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுவதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்பதாகும். கொரோனா வைரஸ், மனிதர்களிடம் இருந்து எளிதாகப் பரவியதால்தான் அதன் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும், இந்த வைரஸ் எதிர்காலத்தில் உருமாற்றம் அடைந்தால், அது எளிதில் மனிதர்களிடம் பரவி, ஒரு புதிய பெருந்தொற்றாக மாறும் ஆபத்து இருப்பதாக மருத்துவர் ரிச்சர்ட் வெப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய டாக்டர் ரிச்சர்ட் வெப்பி, “இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து பெருந்தொற்றாக மாறும் சாத்தியம் இருக்கிறது. இருப்பினும், அதுபோல நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதற்குச் சில சிக்கலான விஷயங்கள் வரிசையாகச் சரியாக நடக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும், அது நடந்தால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை சுமார் 70 பேருக்குப் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விலங்குகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள். அவர்களுக்குக் கண்கள் சிவத்தல் அல்லது காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகளே இருந்தன. இந்த நிலையில், விலங்குகளைக் கையாளுவோர் கட்டாயம் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணியுமாறும், விலங்குகளின் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது கையுறை மற்றும் ஹேண்ட் வாஷைப் பயன்படுத்துமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த வனவிலங்குகளை நெருங்குவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



